பக்கங்கள்

ஞாயிறு, ஜூலை 08, 2012

எது நிர்வாணம்?

முற்றும்  திறந்த நிலையா ?

இல்லை...

ஒளிந்திருக்கும் அத்துணை  விஷயங்களுமே!

 ஆம்...

 . எதார்த்தத்தில் உண்மைகள் நிர்வாணம்.

. சின்ன சிரிப்பில் எதார்த்தங்கள்  நிர்வாணம்.

. செதுக்கப்படாத கற்களில் சிலைகள் நிர்வாணம்.

. புண்பட்ட மனதில் காயங்கள் நிர்வாணம்.

. பூ மொட்டுகளில் மணங்கள் நிர்வாணம்.

. வீணைகளில் மீட்கப்படாத சுரங்கள் நிர்வாணம்.

. எழுத்து வடிவம் பெறாத கவதைகள் நிர்வாணம்.

. இரவில் இயற்கை நிர்வாணம்.

. பகலில்  நட்சத்திரங்கள் நிர்வாணம்.

. கண்விழித்த பின் கனவுகள் நிர்வாணம்.

. கண்ணுறங்கிய பின் நிஜங்கள் நிர்வாணம்.

. அம்மாவாசையில்  பௌர்ணமி  நிர்வாணம்.

. பௌர்ணமியில் இரவு  நிர்வாணம்.

. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் நிர்வாணம்.

. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் நிர்வாணம்.

. தோல்வியில் வெற்றி  நிர்வாணம்.

. வெற்றியில் தோல்வி நிர்வாணம்.

. கோபத்தில் புன்னகை நிர்வாணம்.

. புன்னகையில் கோபம் நிர்வாணம்.

 . உனக்குள்   நீ  நிர்வாணம்.

இப்படியாக ....

சொல்லப்படாத  அத்தனை  உண்மைகளும்  நிர்வாணமே!

செவ்வாய், மே 15, 2012

இப்படியும் திருக்குறள்...


     ஒரு டாஸ்மார்க் கடையின் விளம்பரப்

     பலகையில்...


    " வருக வந்து குடிக குடித்தபின்
        
      ஆடுக  அதற்கு தக."

    ஒரு கல்லூரி வளாகத்தில்...

     " நாம்நோக்கும்  பிகர்  நமை நோக்கா

        நாம்நோக்கி என்ன பயன்."

    ஒரு  உணவகத்தில்...
 
     " ஆட்டலில் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் 
 
        சரவணபவ ஹோட்டலில் ஆட்டல்."

    ஒரு பேரூந்து  நிறுத்தத்தில்...

      " பிகரென வாழ்வினில் வந்துவிட்டால் மற்றாங்கேல்

         பிரன்ஷிப்பே நாறி  விடும்."

     ஒரு வகுப்பறையில்...

     " உறக்கத்தில் சிறந்த உறக்கம் பாடம்நடத்தும்
 
        போது  வரும் உறக்கம்."
   
     ஒரு  தொலைக்காட்சித் தொடரை பார்க்கும் பொழுது...

    " செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

       எட்டுமணிக்கு  மேல்  திருமதிச்செல்வம்." 

    ஒரு மாணவனுடைய புத்தகத்தில் ...

    " அகர முதல எழுத்தெல்லாம் தகர

       சிலேட்டில் மட்டுமே எழுதப்படும்."

    ஒரு குட்டிச்சுவற்றில்....

     "  கற்பவரை  தாங்கும் வகுப்பறையைப் போல
      
         கல்லாதவரைத்   தாங்கும் குட்டிச்சுவர்."

    ஒரு  கரும்பலகையில்...

      " தாயின்றி  அமையாது அன்பு அதுபோல
  
         ஆசானின்றி  அமையாது  அறிவு."


திங்கள், மே 14, 2012

கண்ணாடிப் பெண்...



உன் கனவும் நீ...

உன் நிஜமும் நீ...

உன் நினைவும் நீ...

உன் நிகழ்வும் நீ...

உன் வலியும் நீ...

உன் இனிமையும் நீ...

உன் மௌனமும் நீ...

உன் மொழியும் நீ...

உன் விருப்பமும் நீ...

உன் செயலும் நீ...

உன் புன்னகையும் நீ...

உன் அழகும் நீ...

ஒரு வரியில் சொன்னால்...

உனக்குள் நீ ஒரு கண்ணாடி.

வெள்ளி, ஜனவரி 20, 2012

ஒரு தேவதை உருவாக...

அன்பான கணவன்.

அமைதியான மனைவி.

அவர்களுக்குள்...

 ஆத்மாத்தமான காதல்.

எதிர்பார்கவில்லை...

அவளுடைய மரணம்

அவர்களை

பிரித்து வைக்குமென்று.

அவளை நினைத்து

அவனது கண்கள்

பொங்கின.

 நாட்கணக்கில்...

மாதகணக்கில்...

இப்படியாக

பொழுதுகள் பல

அவன் கைவிட்டு போயின.

அழுகை மட்டுமே

எட்டிப்பார்த்தது அவனுக்கு

நெருக்கமானவர்களின்  ஆறுதல் கேட்டு.

ஒரு நாள் இரவு.

ஆழ்ந்த உறக்கம்.

அவனது

கனவில்...

சொர்க்கம்.

அவனைச் சுற்றி

மெழுகுவர்த்தி ஏந்திய  தேவதைகள்.

கண்கள் தேடின

இறந்துப் போன

அவன் ஆசை மனைவியை.

கண்டு கொண்டான் அவளை

ஒரு தேவதை உருவாக...

கண்கள் குளிர்ந்தன.

உதடுகள் அவள் பெயரை மட்டுமே உச்சரித்தன.

மனது ஒரு இறகாகிப்  பறந்தது.

கால்களை கட்டுப் படுத்த முடியவில்லை.

அருகே ஓடினான்.

அவள் மட்டும்

கையில் ஏற்றப்படாத மெழுகுவர்த்தியுடன்.

காரணம் கேட்டான்.

அவள் கூறினாள்.

" ஒவ்வொரு முறையும் நான் அதை ஏற்றும் போதும்

   உங்கள்  கண்ணீர் அதை அணைத்து விடுகிறது.

   உங்கள்  வாழ்வில்...

   நான், இங்கிருந்து ஒளிவூட்ட ஆசைப்படுகிறேன்.

   எனக்காக, அழுகையை நிறுத்திக்கொள்ளுங்கள் ,

   என் இதயமானவரே !"

அவளுடைய வார்த்தைகளை  ஏற்றுகொண்டான்.

அவள் மீதான ஞாபகங்களை தனது  பொக்கிஷமாக்கிகொண்டான்.

ஆம்...

அவனது ஒவ்வொரு நாள் பொழுதிலும் அவள் ஒளிவூட்டினாள்.

வியாழன், ஜனவரி 19, 2012

கண்ணீர்த்துளி


ஏ பெண்ணே !


முகக்கன்னாடியில் உன் முகம் காட்டு.

மையிட்ட உன்  இரு கரு விழிகளின்

இமையின் விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்த

உன் கண்ணீர்த்துளிகள்

இறக்க  முற்படுகின்றன.

உற்றுப்  பார் .

இருத்தி வைக்க உன்  இமைகளோ

துடி துடிக்கின்றன.

உற்றுப் பார் .

செவி மடித்து கேள்.

உனக்கும் எதிரொலிக்கும்.

அதன் ஊடல் வார்த்தைகள்.

ஆம்...

இமை கேட்கிறது கண்ணீர்த்துளியை பார்த்து...

"நீ ஏன் என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்?" யென்று.

 
இமையின் வலி உணர்ந்து

 கண்ணீர்த்துளி  சொன்னது....

"பிறந்த இடத்தில் இருந்தால்

எனக்கு பெருமை இல்லை."

என்னை தடுக்காதே யென்று.

இமைக்கு புரிந்தது.

அதனூடே

காலமெல்லாம்

அன்பால்,

ஆனந்தத்தால்,

மற்றும்

வலியால்

 உன் விழிகளில் திரளும் கண்ணீர்த்துளிகளை

இறக்க  அனுமதித்தது இமை.

எனக்கும்  புரிந்தது...

உணர்வை வெளிப்படுத்தி

மனதை பலப்படுத்தும்

வழி இது தானோ யென்று!

யார் பிச்சைக்காரன்?


சற்றே உங்கள் சிந்தனையை ஓட்டிப்பாருங்கள்...

நான் மேல்  எழுப்பியுள்ள வினாவிற்கான பதில்

கிடைக்கும்  வரையில்.

ஆமாம்...

நான் கேட்கிறேன்.

பிச்சை எடுப்பவன் எல்லாம் பிச்சைக்காரனா ?

எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

ஒரு தகுதியான பிச்சக்காரனை இனம்காண

நான் கூறும் இந்த மூன்று  தகுதிகளை(அம்சங்களை) கையாளுங்கள்.

1 . எது நடக்க வேண்டும் என்பது அவன் கட்டுப்பாட்டில் இருக்காது.

2 . அவன் விரும்புவது அவனுக்கு கிடைக்காது.

3 . விரும்புவது கிடைத்தாலும் தேவையான அளவு கிடைக்காது.

மேற் சொன்ன குறைபாடுகள் யாருக்கு இருந்தாலும் அவன் பிச்சைக்காரனே.

மேற் சொன்ன குறைபாடுகள் இல்லையெனில் ஒரு  பிச்சைக்காரனும்

பணக்காரனே.

இன்று நம்மில் பலர் அனைத்து விஷயங்களும் இருந்தும்

 பிச்சக்காரர்களாய் தான் உலாவுகின்றோம் இல்லையா!

புத்தகச் சுமை

நள்ளிரவு...

முகமூடி அணிந்த ஒரு திருடன்.

ரகசியமாய் ஒரு வீட்டினுள் நுழைந்தான்.

அப்பாவும் அவரது ஆறு வயது மகளும்

அமைதியாய்  தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

துரிதமாய் செயல்பட்ட திருடன் பீரோவை திறந்தான்.

பணம் மற்றும் நகைகளை வாரி மூட்டை கட்டினான்.

சின்ன சத்தம் கூட இல்லாமல்

வேலையை முடித்துக் கொண்டு வெளியேற முயன்றான்.

அப்போது...

சின்னதாய்  ஒரு சத்தம்.

பார்த்தால்...

எதிரே அந்த ஆறு வயதுச் சிறுமி.

பார்த்தவுடன்,  வியர்த்து நின்றான் திருடன்.

சிறுமியோ...

கத்தி கூப்பாடு போடவில்லை.

ஊரை கூட்ட வில்லை.

ஆனால்...

உருட்டும் விழிகளோடு

சன்னமான குரலிலே மிரட்டி நின்றால்.

" ஏய்! என்ன நகை மூட்டையோட கிளம்பிட்ட?

   அதோ கிடக்குது பார்...

   என்னோட பள்ளிக்கூட புத்தக மூட்டை.
 
   மரியாதையா அதையும் தூக்கிட்டுப்
  
   போய்டு.

   இல்லையின்னா...

   கத்தி  கூப்பாடு போட்டு அப்பாவை
 
   எழுப்பிவிடுவேன் !"

பயந்து புத்தக மூடையுடனும் சேர்த்து இடம் பெயர்ந்தான் அந்த திருடன்.