பக்கங்கள்

வெள்ளி, மார்ச் 15, 2013

இந்திய (குடி)மனுடன் ஒரு பயணம்.. .

 

அது ஒரு மாலை நேரம்...
ஒரு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
அது பவானியிலிருந்து அந்தியூர் வரை செல்லும் பேருந்து.

அதில் எனக்கு கிடைத்ததோ!மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை.

               ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்ட நான் ஏதோ
 
               சிந்தனைவயப்பட்டேன்..
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய இரு இந்திய (குடி)மகன்கள்

காலியாக இருந்த எனது இருக்கையில அமர்ந்தார்கள்.

அவர்களில் ஒருவர் தெரியாமல் என்னை லேசாக இடித்து விட,

 நான் என் சிந்தனைக்கு சற்றே ஓய்வு கொடுத்து விட்டு
 அவரை திரும்பிப் பார்த்தேன்.
 அவரோ, பதற்றத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

 நான் அதை மௌனமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் ஜன்னல் ஓரம் திரும்பி
சிந்தனையை தட்டிவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் என் தோள்பட்டையை சுரண்டி,

 ”சார்,என்ன மண்ணிச்சிட்டீங்க தானே?” என்றார்.

 நானும் அமைதியாக தலையசைத்தேன்...
அதோடு விடவில்லை.

 மீண்டும் என் பக்கம் திரும்பி,”சார்,என் மேல உங்களுக்கு ஒன்னும் கோவம்
 இல்லையே? என்ன மண்ணிச்சிட்டீங்க தானே?” என்றார்.
 இம்முறை நான் சற்று எரிச்சலுடன் வாயை திறந்து ஆம் என்றேன்.

 நான் அவருடைய பேச்சை கேட்பதாக எண்ணி குடிப்போதையில் 
ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார்.
சமாளிக்க முடியாமல் ஜன்னல் ஓரமே திரும்பிக்கொண்டேன்.

அவர் என்னை விட்டபாடில்லை.
 எனக்கு ஏன் இந்த சோதனை என்று நான் நினைத்து முடிப்பதற்குள் மீண்டும்...

 "சார்,ஒன்னு தெரியுமா?ராஜீவ் காந்திக்கு அப்புறம்
 நான் மரியாத கொடுக்கிறது உங்களுக்கு தான்”என்றார்.
 சற்றே மிரண்டுப்போனேன் அந்த இந்திய குடிமகனின் வார்த்தைகளைக் கேட்டு.

 மனசுக்குள் பல கேள்விகள்...
 அவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அப்படி என்ன தான் உறவு?

 அவர் ஏன் என்னை ராஜீவ்காந்தியுடன் ஒப்பிட்டு கூறவேண்டும்?
 எது எப்படியோ என்னை அவர் ராஜீவ் காந்தியோடு ஒப்பிட்டது
 
மனசுக்குள் ஆனந்தமே.

அதை உதட்டோர புன்னகையாக வெளிப்படுத்திகொண்டு தொடர்ந்தேன்.

 மீண்டும் அதே குரல்.
 “சார்,நீங்க எங்க எறங்க போறீங்க?” என்றார்.சலிப்புடன் ஆதர்ஷ் நகர் என்றேன்.

“சார், அன்னமடுவு(அவர் இறங்க வேண்டிய இடம்) வந்ததும் சொல்லுங்க!
நா எறங்கிக்கிறேன்?”என்றார்.

 நான் இறங்க வேண்டிய இடம் அவருடைய இடத்திற்கு முன்பாகவே
 உள்ளது என்றேன்.
 “சார்,பரவாயில்ல நீங்க ஆதர்ஷ் நகர்லேயே எறங்குங்க! என்னோட அன்னமடுவு
  
 வந்ததும் சொல்லுங்க நா எறங்கிக்கிறேன்” என்றார்.

 அவருக்கு விளக்கினேன் நான் அவருக்கு முன்பாகவே இறங்கிவிடுவேன் என்று.
 “சார், நீங்க எங்க வேணும்னாலும் எரங்கிகோங்க! அன்னமடுவு வந்ததும்
  
  என்கிட்டே சொல்லுங்க”என்றார்.

 அதற்கு மேல் என்னால் அங்கே அமரமுடியவில்லை.
 என்னை நானே சாந்தப்படுத்திக்கொண்டு பேருந்தின் பின் படிக்கட்டில்
 
 நின்றுகொண்டு பயணித்தேன்.

 இவரல்லவோ உண்மையான இந்திய (குடி)மகன்!