பக்கங்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

ஒரு அப்பாவின் டைரியிலிருந்து...

   
    மகள் கேட்கிறாள்..
  
  
    ” அப்பா, காக்கா ஏன் கருப்பா இருக்கு?”



   அந்த தெய்வ திருமகளுக்கு...
  
   
   அப்பா சொல்கிறார்...
   



    சில வருடங்களுக்கு முன்பு...
    ஒரு அழகிய ஊர்.
     
    யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

   அன்று இரவு  அப்படி ஒரு பேய் மழை பெய்யுமென்று.


   காற்றுக்கூட மோகினி யாட்டம் ஆடியது.
   தூரத்தில்,நாய்கள் ஊளையிடுவது ஏதோ ஹிந்துஸ்தானி கசல் போல் இருந்தது.
   இன்று ஏன் இப்படி?
   ஏதேனும் அதிசயம் நிகழப்போகிறதா என்று யோசித்து முடிப்பதற்குள்...
   தூரத்து வீட்டில் ஒரு தாயின் பிரசவக்குரல்.
   எட்டிப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம்.
   இரு கைகளையும் இருக்க மூடியபடி ஒரு அதிசய குழந்தை பிறந்திருந்தது.
   அப்படி என்ன தான் கையில் உள்ளது என்று திறந்துப்பார்த்தால்.
   ஒரு கையில் பென்சில் மற்றொரு கையில் அழி ரப்பர்.
   ஏன் என்று தெரிந்து கொள்வதற்குள்.மூ
   பென்சில்லை மட்டும் வைத்துக்கொண்டது.ச்
   தவறாக எழுதினால் தானே அழி ரப்பர் தேவையென்று அதை  
   வீசி எரிந்தது அந்த அதிசய குழந்தை.
   அதன் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சி.
   நாட்கள் ஓடின.
   மாதங்கள் நகர்ந்தன.
   வருடங்கள் கடந்து போயின.
   அதிசய குழந்தை விளையாட்டு பிள்ளையாய் மாறியது.
   ஏனோ தெரியவில்லை சூரியன் அதன் உற்ற நண்பனாகி போனது.
   இருவரும் பரஸ்பரம் உரையாடுவதற்கு ஒரு மொழியை உருவாக்கிகொண்டன.
   ஒவ்வொரு நாள் காலை பொழுதிலும் எழுந்தவுடன் அந்த குழந்தை முதலில்
   காலைவணக்கம் சொல்வது சூரியனிடமே.
   சூரியனும் சோர்ந்து போகும் அதன் முகம் பாராமல்.
   இன்னும் சில தினங்களில் அந்த அதிசய குழந்தைக்கு பிறந்த நாள்.
   பூமியில் உள்ள தன நண்பனுக்கு பிறந்த நாள் பரிசாக டி ஷர்ட்,கை கடிகாரம்,
   வீடியோ கேம் போன்ற பொருட்களை வாங்கி சேர்த்தது வானத்து சூரியன்.
   பரிசுப்பொருட்களை யார் மூலமாக கொடுத்து அனுப்புவதென்று தெரியாமல்
   தவித்த சூரியனின் கண்ணில் பட்டது ஒரு வெள்ளை காக்கை.
   (அப்பொழுதெல்லாம் காக்கைகள் வெள்ளையாகவும் உயரே சூரியனுக்கு
   அருகாமையில் பறக்கும் வல்லமையை பெற்றிருந்தன)
   மகிழ்ச்சியடைந்தது சூரியன்.
   அந்த வெள்ளை காக்கையை அழைத்து பரிசுப்பொருட்கள் அடங்கிய பையை
  
   பூமியில் உள்ள தன் நண்பனிடம் தவறாது சேர்க்க சொல்லியது.
   தலையசைத்த வெள்ளை காக்கை பையுடன் பூமியை நோக்கி பறந்தது.
   வழியில் அதன் கண்ணில் பட்டது ஒரு திருமண ஊர்வலம்.
   பெண்கள் சிலர் பலகார தட்டை கையில் ஏந்தி நடந்து கொண்டிருந்தனர்.
   வெள்ளை காக்கைக்கு நாவில் எச்சில் ஊறியது பலகாரங்களைப் பார்த்து.
   ருசி பார்க்க எண்ணிப் பையை ஒரு மரக்கிளையில் மாட்டி விட்டு சென்றது.
   இதை கவனித்த ஒருவன் பையில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு
   தேங்காய் நார் மற்றும் மணல் கொண்டு பையை நிரப்பி வைத்தான்.
   திரும்பி வந்த வெள்ளை காக்கை ஏதும் அறியாது பையை தூக்கிக்கொண்டு
   சூரியன் கூறிய நண்பன் வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு உயரே பறந்தது.
   மறு நாள் காலை விடிந்தது.
   தன் நண்பன் சூரியனின் பிறந்த நாள் பரிசை ஆவலுடன் எதிர்நோக்கி
   வெளியே வந்தது அதிசயக்குழந்தை .
   பையை பிரித்து பார்த்தும் பெருத்த ஏமாற்றம்.
   குழந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் வேதனைப்பட்டது  சூரியன்.
   அந்த வேதனை அப்படியே வெள்ளை காக்கையின் மீது கோபமாக மாறியது.
   மறுமுறை அந்த வெள்ளை காக்கை தன் அருகே பறந்து சென்றபோது
   சூரியன் தன் வெப்ப கதிர்களால் சுட்டது.
   வெள்ளை காக்கையின் நிறம் இப்படியாக தான் கருமையாக மாறியது என்று

  சொல்லிமுடித்து திரும்பி பார்த்தார் தந்தை.
  அந்த தெய்வத்திருமகளோ தூங்கிப்போனாள்.
  அவளை தூங்க வைத்த பெருமூச்சுடன் அவரும் தூங்கினார்.
  தன் தந்தைக்காக தூங்கியது போல் நடித்த அந்த தெய்வத்திருமகள்
  மீண்டும் கண்விழித்து அவரை தட்டிக்கொடுத்தாள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக